Google News
ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம் , தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும். இதனால் பல குடும்பங்களில் ஒற்றுமை குறைவு மிகுதியாகவே இருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் பொருளாதார தேவை காரணமாக கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்து பேச நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டது. அத்துடன் பணத் தேவைக்காக கணவன் ஒரிடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் குழந்தைகள் வேறு இடத்திலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் பந்தம், பாசம், விட்டுக் கொடுத்தல், அன்பாக பழகுதல் போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு.
ஜோதிட ரீதியாக 6, 8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புத்தி காலங்களில்தான் உறவுகளுடன் பகை வளர்கிறது. எது எப்படி இருந்தாலும் குடும்ப உறவுகள் எதிரியாகாமல் (6ம் பாவகம்) வம்பு வழக்கு இல்லாமல் (8ம் பாவகம்) பிரியாமல் (12ம் பாவகம்) வாழ்வது மிகப் பெரிய கொடுப்பினை.
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு , தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் இடத்திற்கும், 2ம் அதிபதிக்கும் மறைவு ஸ்தான அதிபதிகளான 6,8,12ம் அதிபதிகளின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் எத்தகைய சுப பலன்களையும் அனுபவிக்க முடிவதில்லை. 2ம் இடத்திற்கு சனி, ராகு/கேது சூரியன், செவ்வாய் மற்றும் வக்ர நீச, அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் உறவுகளால் மனக் கசப்பான சம்பவம் மிகுதியாக இருக்கும்.
2ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் அசுப கிரகங்களின் தசை காலங்களில் பணம், பொருள் விரயம், அவமானம், மன வேதனை, உறவுகளுடன் வாக்கால் பிரச்சினை ஏற்படும். இதன் உச்சகட்டமாக குடும்பத்தை விட்டு பிரிய நேருகிறது.
பரிகாரம்
ஜனன கால ஜாதகத்தில் 2-ம் இடத்தில் வக்ரம், அஸ்தமனம் மற்றும் நீச, அசுப கிரகங்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள் குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட வேண்டும். எறும்பு புற்றுக்கு நாட்டு சர்க்கரை கலந்த நொய் அரிசி போட குடும்பம் கோவிலாகும்.
தினமும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு எந்த உறவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை 21 முறைச் சொல்லவும். அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
விரைவிலேயே உங்களது பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வார்கள்.
Discussion about this post