Google News
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் காவல்துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று சோதனை நடத்தினர். பாரமுல்லாவின் உரி செக்டாரில் உள்ள ஹட்லங்கா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் கிராமத்தின் ஹதுல் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று 3வது நாளாக இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
இந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். அடர்ந்த காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மலை உச்சிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் அனந்த்நாக் துப்பாக்கிச் சண்டை இன்றும் தொடர்கிறது.
Discussion about this post