Google News
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இமாச்சல பிரதேச சட்டசபையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 68. இமாச்சல பிரதேச சட்டசபையில் பா.ஜ.,வுக்கு 47 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 20 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 45; காங்கிரஸ் 29; சி வோட்டர் கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடந்த முறை 48.8% வாக்குகள் பெற்ற பாஜக, இந்த முறை 45.2%; காங்கிரஸ் கட்சி 41.7% முதல் 33.9%; ஆம் ஆத்மி கட்சிக்கு 9.5% வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேசம் செல்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாளை காலை 11.30 மணிக்கு அவர் திறந்து வைக்கிறார். பின்னர் பிலாஸ்பூரில் உள்ள லுஹ்னு மைதானத்துக்கு மதியம் 12.45 மணிக்குச் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றி வருகிறார். பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்துக்குச் செல்லும் பிரதமர் அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.
பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானமானது, நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த மருத்துவமனையின் அடிக்கல் 2017 அக்டோபரில் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டு, பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. சுமார் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட AIIMS பிலாஸ்பூரில் 18 சிறப்பு மற்றும் 17 துணை சிறப்பு வார்டுகள் உள்ளன, மொத்தம் 750 படுக்கைகள் 64 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இந்த மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு மதுரை அருகே தோபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் நடக்கவில்லை. ஆனால் சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனையை காணவில்லை என தமிழக எம்.பி.க்கள் கிண்டலாக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post