Google News
மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தை கலைக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2006ஆம் ஆண்டு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இத்துறையின் முதல் அமைச்சராக ஏ.ஆர்.அந்துலே இருந்தார். பின்னர் பாஜக ஆட்சியில் சல்மான் குர்ஷித், ரஹ்மான் கான், நஜ்மா ஹெப்துல்லா, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் இருந்தனர். தற்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் ஜைனர்களின் நலனுக்காக சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துறையின் கீழ் வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமும் செயல்படுகிறது. மத்திய சமூக நீதி அமைச்சகத்தில் இருந்து சிறுபான்மை நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த துறையை கலைக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை வாக்குகளைக் குறிவைத்து இந்தத் துறையை உருவாக்கியது. சிறுபான்மையினர் நலனுக்காக தனி அமைச்சகம் தேவையில்லை; இத்துறை மீண்டும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படலாம் என்பது மத்திய அரசின் திட்டம் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனால், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து மானியங்களும் நலத்திட்டங்களும் தொடரும்; அவற்றை மத்திய அரசு ரத்து செய்யாது; நிர்வாக வசதிக்காக இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை மத்திய அரசு ரத்து செய்யப் போவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மத்திய அரசு சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தை ரத்து செய்து, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்கப் போவதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
Discussion about this post