Google News
காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹாரி சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். முதலில் கத்ரா சென்ற அமித் ஷாவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பாஜகவினர் வரவேற்றனர். அதன்பின், மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற அமித்ஷா, அங்கு சாமி தரிசனம் செய்தார்
பின்னர், ரஜோரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் மொழிவாரி சிறுபான்மையினரான பஹாரிகளுக்கு பட்டியல் பழங்குடியினரின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அறிவித்தார்.
இந்தியாவில் மொழிவழி சிறுபான்மையினருக்கு பட்டியல் பழங்குடியினரின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படுவது இதுவே முதல் முறை. பஹாரிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால், இடஒதுக்கீடு சட்டத்தில் பாராளுமன்றம் திருத்தம் செய்ய வேண்டும்.
பஹாரிகளுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது காஷ்மீரில் அரசியல் ரீதியாகவும் பல மாற்றங்களை கொண்டு வரும். ஜம்மு காஷ்மீரில் குஜ்ஜார், பகர்வால் பழங்குடியினர் மற்றும் பஹாரிகளுக்கு இடையே ஏற்கனவே மோதல் நிலவி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு அறிவிப்பு மேலும் மோதலை அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
குஜ்ஜர்கள் மற்றும் பகர்வால்கள் ஏற்கனவே அங்கு எஸ்டி அந்தஸ்தை அனுபவித்து வரும் நிலையில், பஹாரிகளை எஸ்டியாக அங்கீகரிப்பது தங்களின் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
Discussion about this post