Google News
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தாணிப்பாறைக்கு மேற்கே வத்திராயிருப்பு வனப்பகுதிக்கு உட்பட்ட பீட் எண்.4 வல்லாளம்பாறை பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதியில் காற்று அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையில் திடீரென தீப்பற்றியதால் மலையில் மர்ம நடமாட்டம் உள்ளதா? வனத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால், மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மலை ஏறி, சாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைத்தால் மட்டுமே நாளை (9ம் தேதி) (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள புரட்டாசி பௌர்ணமி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீயை அணைக்காவிட்டால் பௌர்ணமி தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.
எனவே தடை செய்யப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனவாசல் முன்பு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தடையை மீறி யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
Discussion about this post