Google News
மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணைக்கு வருகிறது. ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அந்த உரையில் திடீரென புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக புதிய ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மோடி அறிவித்தார். மேலும், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
முடங்கிய தேசம்
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய நாட்டையே முடக்கியது. மக்கள் தங்கள் பணத்தை மாற்றவும், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. இப்படி நூற்றுக்கணக்கானோர் வரிசையாக நின்றனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கருப்புப் பண மீட்பு நடவடிக்கை என்ன ஆனது என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாக உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்
இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ்.தாக்கூர், பணமதிப்பு நீக்க அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையில் தலையிட முடியாது. மக்கள் படும் இன்னல்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்றார்.
அரசியலமைப்பு பெஞ்ச்
இதைத் தொடர்ந்து, பணமதிப்பிழப்பு விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது. அப்போது, மற்ற உயர் நீதிமன்றங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், மத்திய அரசின் நடவடிக்கையில் சட்டப் பிழைகள் இருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதால், அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மத்திய அரசுக்கு உத்தரவு
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, அரசியல் சாசன பெஞ்ச் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிநபர்களின் பாதிப்புக்கு நிர்வாக ரீதியில் தீர்வு காண முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இன்றைய விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஆஜரானார். இன்றைய விசாரணையின் முடிவில், பணமதிப்பிழப்பு தொடர்பான விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post