Google News
திமுக அரசைக் கண்டித்து அக்டோபர் 27ஆம் தேதி பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் இந்தி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தி மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின்
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இந்தி படங்களை தமிழகத்தில் வாங்கி வெளியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, திமுக மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
திமுகவின் நாடகம்
மேலும் திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வந்தால் இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப திமுக இந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றும் கூறினார்.
அக்டோபர் 27 அன்று ஆர்ப்பாட்டம்
இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், அந்த போராட்டத்தில் திமுகவின் நாடகம் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், தாய்மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் கபட நாடகங்களை வெளிச்சம் போட்டு காட்டுவேன் என்றார். இந்தி திணிப்புக்கு எதிராக திமுக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Discussion about this post