Google News
கர்நாடகாவில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி நடந்து சென்ற நிலையில், சோனியா காந்தி அரை கிலோமீட்டர் மட்டுமே நடந்ததாகவும், பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம்.
வயநாடு தொகுதி எம்பியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி தத்தளித்து வரும் நிலையில், பாரத் ஜோடோ யாத்திரை அக்கட்சிக்கு புதிய புத்துயிர் அளிக்கும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல்
தற்போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தசரா மற்றும் விஜயதசமி காரணமாக 2 நாள் ஓய்வு எடுத்த ராகுல் காந்தி இன்று மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார். பாஜக ஆளும் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ராகுல் காந்தியின் பாத யாத்திரை அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்ட சோனியா
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கட்சியின் தலைவரும், ராகுலின் தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார். அவர் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சோனியா காந்தியை காரில் வருமாறு ராகுல் காந்தி அன்புடன் அறிவுறுத்தினார். ராகுல் காந்தி தனது தாயின் கையைப் பிடித்து அவருக்கு அறிவுறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பசவராஜ் பொம்மை விமர்சனம்
பாத யாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்றது காங்கிரஸ் கட்சியினரையும் உற்சாகப்படுத்தியது. பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தொண்டர்கள் சோனியா காந்தி நடந்து செல்லும் போது கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், சோனியா காந்தி அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்ததாகவும், பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
அரை கிலோமீட்டர் மட்டுமே நடந்தார்
இது குறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது:-
அவர் (சோனியா காந்தி) அரை கிலோ மீட்டர் மட்டுமே நடந்து சென்று விட்டு சென்றார். பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பாரத் ஜோடோ யாத்ராவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாரத் ஜோடோ யாத்திரை போன்று மாநிலம் தழுவிய யாத்திரையை பா.ஜ.க மேற்கொள்ளப் போகிறது என்பது உண்மையல்ல. நான் ஏற்கனவே கூறியது போல் 6 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
Discussion about this post