Google News
கோவையில் மக்கள் முன்னிலையிலும், நீதிமன்றத்துக்கு அருகிலும் கொலைகள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவை கொலை நகரமாக மாறி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும், துப்பாக்கி கலாச்சாரமும் தலையெடுத்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயிலில் கோபாலபுரம் பகுதி அமைந்துள்ளது. வழக்கறிஞர் அலுவலகங்கள், தனியார் ஓட்டல்கள், உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இரண்டு வாலிபர்களை 5 பேர் கொண்ட கும்பல் துரத்தி சென்றது.
இருவரையும் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றம் அருகே கொலை
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கீரநத்தத்தை சேர்ந்த கோகுல் என்பதும், காயமடைந்தவர் சிவானந்தகாலனியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. மாவட்ட நீதிமன்றம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடத்தில் கொலை
இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஆவாரம் பாளையம் அருகே இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சத்யா பாண்டியை அடையாளம் தெரியாத கும்பல் விரட்டிச் சென்று படுகொலை செய்தது. கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கர சம்பவங்கள் அரங்கேறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கண்டித்துள்ளார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். கோவை கொலை நகரமாக மாறி வருகிறது என்று அண்ணாமலை அந்த பதிவில் கூறியுள்ளார். கோவையில் நேற்று மட்டும் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. அதுமட்டுமின்றி துப்பாக்கி கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு அனைத்து அமைச்சர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
பாதுகாப்பற்ற சூழல்
மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தமிழகத்தை தள்ளிவிட்டது திறமையற்ற திமுக அரசு. உடனடியாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post