Google News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2007-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பாலமுருகன் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையில்லாமல் போனது. இந்த நிலையில், மாற்றுதிறனாளியான பாலமுருகனுக்கு 6-வது ஊதிய குழு சம்பள விகித்தை விட 7-வது சம்பள ஊதிய விகிதம் குறைத்து மதிப்பிட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 7-வது சம்பள ஊதிய விகிதத்தை திருத்தி அமைத்திட திருக்கோயில் இணை ஆணையர் குமரகுருபரனிடம் மனு கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 7-வது ஊதிய சம்பளத்தை நிர்ணயித்து வழங்க கருத்துரு அனுப்பும்படி இணை ஆணையர்களுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். திருச்செந்தூர் கோயிலில், 7-வது ஊதிய குழு சம்பளத்தை நிர்ணயிக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் இணை ஆணையர் குமரதுரையிடம் நேரில் பேசியுள்ளார்.
அப்போது சம்பளத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க ரூ.3 லட்சம் கேட்டதாகவும், அதனை உறுதிப்படுத்த முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணத்துடன் கடந்த டிசம்பர் 17-ம் தேதி திருச்செந்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் வழங்கச் சென்றிருந்தபோது செல்போனில் நடந்த உரையாடலை பாலமுருகன் பதிவு செய்துள்ளார். அந்த ஆடியோவில், “50 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கேன் சார்” எனச் சொல்ல, அதற்கு இணை ஆணையர், “இங்க கேமிரா இருக்கு” எனச் சொல்ல, பாலமுருகன், “பணத்தை வேறு பணியாளரிடம் கொடுத்துட்டுப் போறேன் சார்” எனச் செல்கிறார்.
அதற்கு இணை ஆணையர், ”முன் கூட்டியே தரப்போறீங்களா?” எனக் கேட்பது போல் ஆடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இணை ஆணையர் அலுவலகத்தில நடந்த சம்பவம் அங்குள்ள வீடியோவில் பதிவாகி இருப்பதாகவும், இந்த பதிவு 14 நாள்களுக்கு பிறகு அழிந்துவிடும் என்பதால் அதற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் பாலமுருகன்.
இதற்கிடயே அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் மற்றும் இணை ஆணையர் குமரகுருபரன் ஆகியோரின் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து குறித்து இணை ஆணையர் குமரதுரையிடம் பேசினோம், “திருச்செந்தூர் கோயிலின் இணை ஆணையராகப் பொறுப்பேற்று இரண்டு மாதமே ஆகிறது. கருணை இல்லம், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியரான பாலமுருகன், சரியாக பணிக்கு வருவதில்லை.
ஒரே சில நாள்களே பணிக்கு வருவதாக வந்தாலும், பணியை முறையாகச் செய்யவில்லை என எனக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு சென்று ஆய்வுக்கு சென்றேன். “ஒழுங்கா பணிக்கு வரமாட்டீங்களா?” எனக் கேட்டேன். டிசம்பர் 17-ம் தேதி எனது அலுவலகத்திற்கு வெளியே வந்து போனில் அழைத்து பேசினார். திடீரென உள்ளே வந்து பணத்தை மேஜையில் வைத்தார். அதனை எடுத்து செல்லும் படிச் சொன்னேன். ஒரு சிறிய செயலாகத்தான் நினைத்தேன்.
அதை அவர் இவ்வுளவு பெரிய பிரச்னையாக ஆக்குவார் என நான் எதிர்பார்க்கவில்லை. பாலமுருகன் 7-வது திருத்திய ஊதிய குழு விகித ஃபைலை எந்தவிதத்திலும் நான் காலதாமதம் செய்யவில்லை. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை மீண்டும் நல்ல முறையில் நடந்த வேண்டும் என்பதகாகத்தான் அவரிடம் பேசினேன். ஆனால், அது தொடர்பான எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கெள்ளவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணை இல்லத்தில் மாணவர்கள் யாரையும் சேர்க்கவில்லை. ஏற்கெனவே 50 மாணவர்கள் படித்த கருணை இல்லத்தில் தற்போது ஒருவர் கூட படிக்க வரவில்லை. எனவே அந்த பணிக்கு அவர் தகுதியில்லாதவர். என்னை மிரட்டுவதற்காகத்தான் இப்படி ஆடியோவை பதிவு செய்து பாதியை கட் செய்து வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. எனது அறையில் உள்ள கேமிரா பதிவை அதிகாரிகள் ஆய்வு செய்துள்னர்” என்றார்.
https://athibantv.com
Discussion about this post