Google News
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் போது புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தங்கள் துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறை மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் விளக்கினர்.
கூட்டத்தில் தலைமை செயலர் பேசுகையில்,””பலவீனமான மற்றும் சேதமடைந்த பொதுக்கட்டடங்களை கண்டறிந்து இடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும், அரசு கட்டிடங்களின் மேல் தளங்களை ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற வேண்டும்.அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உறுதி செய்ய வேண்டும்.
சாய்ந்துள்ள மின்கம்பிகள், வலுவிழந்த மின்கம்பங்கள், வலுவிழந்த மின்கம்பிகளை கண்டறிந்து உடனடியாக மாற்ற வேண்டும். சுரங்கங்களில் தேங்கி நிற்கும் நீரின் ஆழத்தைக் கண்டறிய, சுரங்கப்பாதைகளின் இருபுறமும் அளவீடுகள் எடுக்கப்பட வேண்டும். சுரங்கங்களில் எச்சரிக்கை அமைப்புகளின் சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும்.
மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த மாதம் (அக்டோபர்) 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைச் சரிபார்த்து சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும்.
உள்ளாட்சி அமைப்புகளும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கிளைகள் மற்றும் விழுந்த மரங்களை அகற்ற வேண்டும்.
அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து பராமரிக்க வேண்டும். புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்றார்.
Discussion about this post