Google News
கடவுளர்களை பூஜிப்பதற்கும் தரிசிப்பதற்குமான சிறந்த மாதங்களில் பங்குனி மாதமும் உண்டு. பங்குனி மாதம் என்பது வழிபாடுகளுக்கான மாதம். பங்குனி மாதம் என்பது சிவனாருக்கும் அம்பாளுக்கும் உரிய மாதம். இந்த மாதத்தில் முருக வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.
அதேபோல், பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாளில்தான் ஐயப்ப சுவாமியின் மணிகண்ட அவதாரம் நிகழ்ந்தது என விவரிக்கிறது புராணம். இந்த நாளில் ஐயப்பனுக்கு சபரிமலை முதலான க்ஷேத்திரங்களிலும் தமிழகத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறும்.
பங்குனி உத்திர நாளில்தான், கடவுளர்கள் பலருக்கும் திருமணங்கள் நடைபெற்றன என்கிறது புராணம். ஆனாலும் பங்குனி உத்திரம் என்பது முருக வழிபாட்டுக்கு உகந்தது. குறிப்பாக முருகப்பெருமானை விரதமிருந்து பூஜிப்பதும் தரிசிப்பதும் விசேஷமானது என்கிறார்கள் பக்தர்கள்.
பங்குனி உத்திர விரதம் மிக மிக எளிமையானது. காலையிலேயே நீராடிவிடவேண்டும். வீட்டுப் பூஜையறையைச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். முருகப்பெருமான் படங்கள் அல்லது சிலைகள் வீட்டில் இருந்தால், முருகனுக்கு சந்தனம் குங்குமமிட்டு அலங்கரிக்க வேண்டும். செவ்வரளி மலர்கள் முருகக் கடவுளுக்கு உகந்தவை. எனவே செவ்வரளி மலர்கள் சூட்டி, முருகப்பெருமானை நினைந்து வேண்டிக்கொள்ள வேண்டும்.
பங்குனி உத்திர நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானங்களைச் செய்வது மிகுந்த புண்ணியம் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என அன்னதானம் செய்யலாம்.
அதேபோல், நம்மால் முடிந்த அளவுக்கு மஞ்சள், சரடு, குங்குமம், ஜாக்கெட் பிட், கண்ணாடி என மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் விசேஷ பலன்களைக் கொடுக்கும். முருகப் பெருமான், நமக்கு இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தையும் களைந்து நமக்கு நல்வழி காட்டி அருளுவார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Discussion about this post