Google News
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
கந்த சஷ்டி விரதத்தை ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
Discussion about this post