Google News
கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
அப்பாலரங்கம்
108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.
ஆதிரங்கம்
கர்நாடக மாநிலத்தில் உள்ளது, ஸ்ரீரங்கப்பட்டனம். இங்கு காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்குள்ள பெருமானை நோக்கி தவம் இயற்றியுள்ளார். அவருக்கு இத்தல பெருமாள், புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். கவுதம முனிவரின் வேண்டுகோள்படி, அவருக்கு காட்சியளித்த கோலத்திலேயே, இறைவன் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.
சதுர்த்தரங்கம்
சாரங்கபாணி ஆலயம்தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. காவிரி நதி – காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் இந்த ஆலயம் உள்ளது. இதுவும் திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றுதான். இங்குள்ள பெருமாள் சன்னிதி, தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறங்களிலும் உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரி கிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
மத்தியரங்கம்
தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடமாக திருச்சி அருகே உள்ள திருவரங்கம் உள்ளது. பஞ்சரங்க தலங்களில் இது ‘மத்தியரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். 108 திவ்ய தேச திருக்கோவில்களில், முதல் திவ்ய தேசமாக விளங்கும் திருவரங்கம் ஒரு சுயம்பு திருத்தலமாகும். இங்கு 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமைந்துள்ளன. இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.
பஞ்சரங்கம்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப் பதிகளுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்கர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.
Discussion about this post