Google News
லிபிய துறைமுக நகரமான டெர்னாவில் டேனியல் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் லிபியாவை டேனியல் புயல் தாக்கியது. லிபியாவில் மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள டெர்னா, பெடா, சூசா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது.
இதன் காரணமாக கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
டேனியல் சூறாவளி முதலில் கிரீஸில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை லிபியா நாட்டையும் தாக்கத் தொடங்கியது.
லிபியாவில் உள்ள வாடி டெர்னா ஆறு மலைகளிலிருந்து தொடங்கி, நகரத்தின் வழியாகச் சென்று மத்தியதரைக் கடலில் கலக்கிறது. வருடத்தில் பல நாட்கள் வறண்டு இருக்கும். ஆனால், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை மற்றும் நீர்வரத்து காரணமாக 2 மதகுகள் திடீரென உடைந்தன. இதனால் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்தன. அணை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. லிபிய துறைமுக நகரமான டெர்னாவில் டேனியல் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடலோர துறைமுக நகரமான டெர்னாவின் மேயர் 18,000 முதல் 20,000 இறப்புகள் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் மதிப்பீட்டை வெளியிட்டுள்ளார். இன்னும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெர்னாவுக்கு வெளியே இடிந்து விழுந்த அணைகள் 1970களில் கட்டப்பட்டவை, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Discussion about this post